அனிமேஷன் துறையில் எண்ணற்ற வாய்ப்புகள்

அதீத தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மீடியா துறையில் ஏற்பட்டுள்ள அபரிமித மாற்றங்கள் ஆகிவற்றால், மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உருவாகியுள்ள வேலை வாய்ப்புகள் எண்ணற்றவை.

Blog Details

   இதன்மூலம் ஒவ்வொரு பணி நிலையிலும் பலவிதமான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனிடையே, தான் ஒரு அனிமேட்டர் ஆக வேண்டும், டிசைனர் ஆக வேண்டும், விசுவல் எபெக்ட் டிசைனர் மற்றும் மல்டிமீடியா டிசைனர் ஆக வேண்டும் என்பன போன்ற பலவிதமான ஆசைகள் மாணவர்களிடையே பெருக்கெடுத்துள்ளன. தற்போதைய நிலையில், ஏறக்குறைய, ஒவ்வொரு மீடியா நிறுவனமும், அனிமேஷனின் ஏதேனும் ஒரு வடிவத்தைப் பயன்படுத்தி வருகின்றன. மீடியாவின் ஆதார அம்சமாக அனிமேஷன் மாறிவருகிறது. மேலும், இன்றைக்கு, ஒவ்வொரு விளம்பர ஏஜென்சியும், தங்களின் பார்வையாளர்களைக் கவர, அனிமேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன எனலாம். நிலைமை இப்படி இருக்கையில், அனிமேஷன் துறை எதிர்கொண்டிருக்கும் பெரிய சவால் என்னவென்றால், தேவைக்கேற்ப, தகுதியான மற்றும் திறமைவாய்ந்த மனிதவளம் போதுமான அளவில் கிடைக்கப்பெறாமைதான். இதனால், இத்துறை செயல்பாட்டில் பெரிய சுணக்கம் ஏற்படுகிறது. எனவே, இத்துறையில், தகுதியும், திறமையும் வாய்ந்த ஆட்களின் தேவை மிக அதிகம் என்பதை மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இத்துறையில் சாதிப்பதற்கு தேவையான முக்கிய மூலதனம் எதுவெனில், ஒருவரின் படைப்பாக்கத் திறன்தான். ஒருவர், தனது படைப்புத்திறனை, கூர்மையாக்கி, பட்டை தீட்டிக் கொள்ள வேண்டும். அந்த படைப்பாக்கத் திறனை, சரியான நேரத்தில், சரியான ஆட்களின் முன்பாக, வெளிப்படுத்தும் சாமர்த்தியத்தையும் பெற்றிருக்க வேண்டும். அனிமேஷன் துறையில் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் நாட்டில் அதிகளவில் உருவாகி வருகின்றன. அவை, மாணவர்களுக்கு, படைப்பாக்கத் துறையில் பயிற்சி கொடுத்து அனுப்பி வைக்கின்றன. இத்துறையில் நுழைய, ஒருவருக்கு, சரியான முறையிலான பயிற்சி தேவை. இத்துறையில் ஆர்வமுள்ள ஒரு மாணவர், தனது பள்ளி மேல்நிலைப் படிப்பை நிறைவுசெய்த பின்னர், அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் துறையில், பட்டப் படிப்பை மேற்கொள்ள முடியும். பட்டப் படிப்பு தவிர, குறுகியகால டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளையும் மேற்கொள்ளலாம். மேலும், நீங்கள் விரும்பிய வகையில், அட்வான்ஸ்டு படிப்புகளையும் படிக்கலாம்.

தகுதிநிலை
இந்தியாவைப் பொறுத்தளவில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், பள்ளி மேல்நிலைப் படிப்பை நிறைவுசெய்த மாணவர்களுக்கு, இத்துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகளையே வழங்குகின்றன.
வேறுசில கல்வி நிறுவனங்கள், முதுநிலை டிப்ளமோ படிப்புகள் மற்றும் இதர வகையான படிப்புகளை வழங்குகின்றன. இத்தகைய முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு, ஒரு மாணவர், குறைந்தபட்சம் இளநிலைப் பட்டப் படிப்பு அல்லது அதற்கு இணையான 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். புதுவையில் ஆகாஷ் அனிமேஷன் மீடியா கல்லூரியானது, தரமான மற்றும் சிறப்பான முறையில், அனிமேஷன் கல்வியை வழங்கி, சிறந்த படைப்பாக்கத்திறன் பெற்ற மாணவர்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

எதிர்கால வாய்ப்புகள்
அனிமேஷன் துறையின் வளர்ச்சி புதிய உயர்வு நிலைகளை எட்டியுள்ளது. பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகரித்துவரும் தேவைகளை, இத்துறையின் நிபுணர்கள் பூர்த்திசெய்ய வேண்டியுள்ளது.
ஒரு அனிமேஷன் நிபுணர், உற்பத்தி நிறுவனங்கள், விளம்பர ஏஜென்சிகள், சினிமா தயாரிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கணினி விளையாட்டுகள், கார்ட்டூன் சேனல்கள் மற்றும் பலவிதமான வலைதளங்கள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகளை பெறலாம். மேலும், பகுதி நேர வேலை முறையிலும், அனிமேஷன் கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகவும் பணியாற்றலாம். எனவே, அனிமேஷன் துறையை படிக்கவிரும்பும் மாணவர்கள், எந்தவித தயக்கமும் இன்றி, இத்துறையில் கால் பதிக்கலாம். ஆர்வமும், உழைப்பும், படைப்புத்திறனும் இருந்தால் போதும்.


Back